ரஜினி வீடியோவை நீக்கியது டுவிட்டர்

2020-03-21 23:07:12


சென்னை
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட சுய ஊரடங்கை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் பரவ தொடங்கி உள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு நாடு முழுக்க வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்பிரபலங்களும் வரவேற்றுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலையே இதை வரவேற்றிருந்தார். தொடர்ந்து இன்றும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டார்.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் சுய ஊரடங்கு உத்தரவை வரவேற்றுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோவில்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது நிலையில் உள்ளது. அது 3வது இடத்திற்கு போய் விடக்கூடாது. மக்கள் வெளியில் நடமாடும் வேளைகளில் இருக்கும் இந்த வைரஸ் 12 - 14 மணிநேரத்தில் பரவாமல் இருந்தாலே மூன்றாவது நிலைக்கு போவதை தடுத்து விடலாம். அதற்காக தான் பிரதமர் மோடி மார்ச் 22ம் தேதி ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் 2வது நிலையில் இருந்தபோது அந்த நாட்டு அரசு எச்சரித்தது. ஆனால் மக்கள் உதாசீனப்படுத்தியதால் பலர் இறந்து போனார்கள். அதேமாதிரி நிலைமை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது. ஆகவே அனைவரும் 22ம் தேதி அந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வைரஸை பரவாமல் தடுக்க மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலரும் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்காக பிரதமர் சொன்ன மாதிரி மாலை 5மணிக்கு மனதார பாராட்டுவோம். அவர்களின் குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
ஆனால் இந்த வீடியோவை 4 மணி நேரம் கழித்து 8. 40 மணி அளவில் டுவிட்டர் நீக்கியது. இது டுவிட்டர் விதிமுறைகளுக்கு முரணானாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.