2011 உலகக்கோப்பை - மஹிந்தானந்த அலுத்கமகே. • உண்மையா? அரசியலா?

2020-06-19 18:02:42

கொழும்பு :

 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்து தோற்றதாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார் முன்னாள் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே. இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. அந்த இறுதிப் போட்டி நடைபெற்ற போது மஹிந்தானந்த அலுத்கமகே விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

  • உண்மையா? அரசியலா?

9 ஆண்டுகளுக்கு முன் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளார் அமைச்சர். ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கையில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இது வெறும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டா? அல்லது உண்மையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

  • கடும் பதிலடி

அவரே இப்படி சொல்வது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அந்தப் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்ககாரா கடும் பதிலடி கொடுத்துள்ளார். அதே போல  அந்தப் போட்டியில் சதம் அடித்த மகிளா ஜெயவர்தனேவும் ஆதாரம் கேட்டுள்ளார்.

  • 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி

 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 274 ரன்கள் குவித்தது. மகிளா ஜெயவர்தனே 103 ரன்கள் குவித்து இருந்தார். அது சவாலான இலக்காகவே கருதப்பட்டது.

  • இந்தியா வெற்றி

 இந்திய அணியின் சேஸிங்கில் கௌதம் கம்பீர் 97 ரன்கள் குவித்தார். தோனி கடைசி வரை களத்தில் நின்று 91 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அது இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத போட்டி ஆகும்.

 

  • இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

 இந்த நிலையில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  அந்தப் போட்டியில் இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்து தோல்வி அடைந்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்தப் போட்டியில் இலங்கை வென்று இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

  • சில குழுக்கள்

இதில் கிரிக்கெட் வீரர்களை தான் சம்பந்தப்படுத்த விரும்பவில்லை எனவும் அதே சமயம் சில குழுக்கள் இதில் நிச்சயம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் எனவும் கூறி உள்ளார். அவர் குறிப்பிட்டு எந்த ஒரு வீரரின் பெயரையோ ஆதாரத்தையோ கூறவில்லை.

  • ஜெயவர்தனே கேள்வி

இந்த நிலையில்  முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்தனே  தேர்தல் நடக்க இருப்பதால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவதாக தன் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும்  இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் மற்றும் ஆதாரத்தை அவர் கேட்டுள்ளார்.