நடிகர் திலகம் சிவாஜிகணேசன்

2020-07-21 17:23:07

அறிமுகமான முதல் படத்திலேயே உச்சம் தொட்டு  தமிழ்த்திரை உலகின் இமயமாக வலம் வந்தவர்  நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஒருவர் மட்டுமே.

1928 அக்டோபர் முதல் தேதி தஞ்சை சூரக்கோட்டையில் வி.சின்னையா மன்றாயர்-ராஜாமணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்து  கணேசமூர்த்தி எனப்பெயரிடப்பட்டு  வி.சி. கணேசன் என்று அழைக்கப்பட்டவர்  படிப்பை விட நாடக மேடைகளையே விரும்பினார்.

அதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். சின்னச்சின்ன வேடங்கள் பசிக்கொடுமை இவற்றையெல்லாம் தாக்குப்பிடித்து படிப்படியாக மேலே வந்தார்.

அறிஞர் அண்ணா எழுதிய  சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்  நாடகத்தில் மராட்டிய மன்னன் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்துக்கு வந்திருந்த தந்தை ஈவெரா பெரியார் சிவாஜியாக ஒரு சின்னப்பையன் நடித்தானே...எங்கே அவன்? என்று அழைத்து  மிகவும் அற்புதமாக நடித்தாய். எனவே  இனி உன் பெயர் சிவாஜிகணேசன் என்று பாராட்டுக்கிரீடம் சூட்டினார். பகுத்தறிவுப்பகலவன் சூட்டிய பெயர் அல்லவா  அதுவே நிலைத்து விட்டது.

அடுத்து சினிமாவுக்கு வந்தார்இ சிவாஜி. சினிமாவிலும் மிகவும் லேசில் வாய்ப்பு கிடைத்து விடவில்லை. அஞ்சலிதேவி தயாரித்த பூங்கோதையில் நடித்துக்கொண்டு இருந்தபோதே பராசக்தி படத்தில் வாய்ப்பு வந்தது. அதுவும் அவரது மெலிந்த தோற்றத்தினால் பறிபோகும் நிலையில் இருந்தபோது தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்  அண்ணா ஆகியோர் சிவாஜிக்கு ஆதரவாக நின்று நடிக்க வைத்தனர்.

தமிழ்த்திரையுலகை திருப்பிப்போட்ட பராசக்தி

1952 அக்டோபரில் தீபாவளியன்று வெளியான பராசக்தி  தமிழ் சினிமா வரலாற்றையே திருப்பிப் போட்டது. அதுவரை புராணக்கதைகளும் சமஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடைவசனங்களுமே சினிமா இலக்கணமாக கையாளப்பட்டு வந்தன.

பராசக்தி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு  சமூக அவலங்களைச்சாடியது. திராவிட இயக்க தளகர்த்தரான கலைஞர் மு. கருணாநிதி தீட்டியிருந்த கூர்மையான வசனங்கள்இ சமூகத்தை சிதைத்துக்கொண்டிருந்த சண்டாளர்களை பதம் பார்த்தன. அவற்றை சிவாஜிகணேசன் உச்சரித்து நடித்தவிதம் கண்டு தமிழ்மக்கள்  வியந்தனர்.

இவன்தான் நமக்கான நடிகன்; நம்மில் ஒருவன் என்று முடிவு கட்டினர். படத்தின் முடிவும் எல்லோரும் வாழவேண்டும் என்ற பாடலுடன் நிறைவு பெற்றது. சமத்துவத்தைச்சொன்ன படம் என்பதால்  மக்களின் பேராதரவோடு திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டன.

அந்தத் தீபாவளி  சிவாஜிக்கு தலைத்தீபாவளி. கமலா அம்மாளை கைப்பிடித்த வேளையில் முதல் படமே பெரும் வெற்றி என்பதால் அவருக்கு இரட்டிப்பு தீபாவளியாக அமைந்தது.

ஆனால் பராசக்தி படம் ஓடவிடாமல் எத்தனையோ தடைகள்.  பராசக்திக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர்  ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசிடம் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன.

திரைப்படம்  ஒரு சமூகத்துக்கும்  கடவுள் நம்பிக்கைக்கும்  எதிரானது என்ற கருத்து பரவியதால் அன்றைய பல்வேறு  நாளிதழ்களில் படத்திற்கு எதிராகக் கடுமையான கருத்துகள் எழுதப்பட்டன. இந்தப் படம் எப்படி வெளியானது என்று தணிக்கைக் குழு மீது அறிவுஜீவி (?) விமர்சகர்கள் கடும் தாக்குதல் தொடுத்தனர்.

பராசக்தி படம் வெளியான 10 நாட்களில் அன்றைய சென்னை அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் படத்தை தடை செய்வதற்கான வழிகளை ஆராய்ந்தது. ஆனால் பராசக்தி தரப்பினரும் சளைக்காமல் போராடினர். எனினும்  அனுமதி பெறாமல் சேர்க்கப்பட்டதாகக் கூறி  3 காட்சிகள் நீக்கப்பட்டன. இது அனைத்து திரையரங்குகளுக்கும் தெரிவிக்கப்பட்டு காட்சிகள் நீக்கப்பட்டன. (உதாரணமாக அம்பாள் வெறும் கல் என்ற வசனம்  வெறும் வாயசைப்பாகவே இருக்கும்).

இப்படி கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பராசக்தி தடை செய்யப்படலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இது அந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய விளம்பரமாக மாறியது. இதனால் பராசக்தி பலவாரங்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. சென்னையில் 100 நாட்களை கடந்து ஓடிய பராசக்தி்  திருச்சியில் 242 நாட்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. மதுரையில் ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கான தங்கம் தியேட்டரிலும் 100 நாட்களை கடந்தது.

இதை விட பெரிய ஆச்சரியம்  கடல் கடந்து இலங்கையிலும் பராசக்தி பெரும் சாதனை படைத்தது. ஈழத்தமிழர்களின் மனதில் அசைக்கமுடியாத இடம் பிடித்தார்  சிவாஜி.  தாய்த்தமிழகத்தை விட அதிகமாக பராசக்தி ஓடியது இலங்கையில் தான். அதன் தலைநகரான கொழும்பில் மைலன் வெள்ளவத்தையில் ஸ்டான்டன் திரையரங்குகளில் பராசக்தி ஓடிய நாட்கள் 280.

பராசக்தியில் சிவாஜி பேசிய முதல் வசனம் சக்சஸ்   அந்த வாக்குப்படியே அவரது திரைப்பயணம் வெற்றிகரமாகத் தொடங்கி 40 ஆண்டுகளுக்கு மேல் வெற்றி மீது வெற்றியாக  நீடித்தது.

தமிழோடு  தெலுங்கு  கன்னடம்  மலையாளம்  இந்திப்படங்கள் சிலவற்றிலும் நடித்த சிவாஜியின் மொத்த படங்களின் எண்ணிக்கை 300-ஐ எட்டும். நடிப்பில் நவரசங்களையும் காட்டிய அவருக்கு நடிகர் திலகம் என்ற   பட்டம் பொருத்தமாக அமைந்தது.

எதிர்பாராதது -  உத்தம்புத்திரன் -  மனோகரா -  வீரபாண்டிய கட்டபொம்மன்- பாவமன்னிப்பு -  பாசமலர் -  பாகப்பிரிவினை -  பாலும் பழமும்-  பார்த்தால் பசிதீரும் -  திருவிளையாடல் -  கர்ணன் -  குலமா குணமா -  நவராத்திரி (100-வது படம்)  உயர்ந்த மனிதன் (125-வது படம்)  சிவந்தமண் -  தில்லானா மோகனாம்பாள் -  வியட்நாம் வீடு -  சவாலே சமாளி (150-வது படம்) பட்டிக்காடா பட்டணமா – வசந்தமாளிகை -  தங்கப்பதக்கம் - அவன் தான் மனிதன் (175-வது படம்)  திரிசூலம் (200-வது படம்)  தியாகம் -  தீர்ப்பு (225-வது படம்) போன்றவை மிகப்பெரும் வெற்றியைப் பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தன.

திரிசூலம்  தமிழ்ப்பட உலகில் மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்திய படம். அவருடைய  எல்லாப் படங்களுமே மிகவும் எளிதாக 75 நாள்  100 நாள்  தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்திரையுலகில் அதிக வெள்ளி விழாப்படங்களைத் தந்தவரும் சிவாஜி தான்.

இலங்கையில் சாதித்த கலைக்குரிசில்

 குறிப்பாக  வசந்த மாளிகை இலங்கையில் மிகப்பெரும் வெற்றிப்படைப்பாக அமைந்தது. இலங்கைத்தமிழர்களின் இதய நாயகனாகத்திகழ்ந்த சிவாஜியை கொழும்புக்கு வரவழைத்து  கலைக்குரிசில்  என்ற பட்டம் அளித்து மகிழ்ந்தனர்.

இலங்கை-இந்திய கூட்டுத்தயாரிப்பாக வெளிவந்த பைலட் பிரேம்நாத் படம்  தமிழகத்தில் 100 நாட்களும்  இலங்கையில் 200 நாட்களை கடந்தும் ஓடியது. உத்தமன்  பட்டாக்கத்தி பைரவன் போன்ற படங்கள் இலங்கையில் வெள்ளி விழா கண்டன. தாயகத்தமிழர்களை விட ஒரு படிமேலாகவே ஈழத்தமிழர்கள்  நடிகர் திலகத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

குடும்பக்கதைகள் என்றாலே சிவாஜி படங்கள் தான் என அவர் பாத்திரங்கள் ஏற்றார். அதோடு  புராணக் கதாபாத்திரங்களிலும் அசத்தினார். கடவுள் வேடங்களுக்கும் கச்சிதமாகத் தோன்றினார். சிவபெருமான் என்றாலே  நமக்கு திருவிளையாடல் தான் நினைவுக்கு வரும். கட்டபொம்மன்  கப்பலோட்டிய தமிழன் என சுதந்திரப்போராட்ட வீரர்களை கண்முன்கொண்டு வந்து நிறுத்தினார். அவர் ஏற்ற கர்ணன் கதாபாத்திரம்  காலம் கடந்தும் போற்றப்படுகிறது.  கர்ணன் வசந்தமாளிகை  ராஜபார்ட் ரங்கதுரை  சிவகாமியின்செல்வன் முதலான படங்கள் மறுவெளியீடுகளிலும் சக்கைப்போடு போட்டன.வேறு எந்த நடிகரின் படமும் இப்படி வெற்றியை ஈட்டியதில்லை.

55 வயதைக்கடந்த பிறகும் அவர் நடித்த முதல் மரியாதை  தேவர் மகன் ஆகிய படங்கள் காவியமாக அமைந்தன.

நடிகர்திலகத்தைப்பற்றிய விஷயங்கள் கடல் போல் பரந்து விரிந்திருக்கின்றன. அவற்றைச் சொல்வதானால் மெகா சீரியல் போல் ஆண்டுக்கணக்கில் சொல்லிக்கொணடே இருக்கலாம்.

சிவாஜியின் நிறைவேறாத லட்சியம்

தனக்கு சிவாஜி என்று பெயர் சூட்டிய தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பதே தனது லட்சியம் என்று அவர் அடிக்கடி கூறி வந்தார். ஆனால் அது நிறைவேறாமலே 2001 ஜூலை 21-ந்தேதி  உடல்நலக்குறைவால்  மரணம் அடைந்தார். அவரைப்பிரிந்த துயரம் தாங்காமல் அடுத்த மூன்றே மாதங்களில் அவருடைய மனைவி கமலா அம்மாளும் மறைந்து விட்டார்.

மலர்ந்தும் மலராத பாதிமலர் போல....மறைந்தும் தமிழ் மக்கள் மனதில் இருந்து மறையாத நடிகர் திலகத்துக்கு  19-ம் நினைவு நாள்.

---திருநெல்வேலியில் இருந்து மணிராஜ்