கனடாவின் ஒன்றாரியோ கல்விச் சபைகளில் 50 வீதமான தலைமை அதிகாரிகள் பெண்கள்

2020-07-24 17:17:03

 

கனடாவின்  ஒன்றாரியோ மாகாணத்தில்  இயங்கிவரும்  72 கல்விச் சபைகளில் 50 வீதமானவற்றில் தலைமை அதிகாரிகளாக பெண்களே பணியாற்றுகின்றார்கள் என்ற விபரங்கள் அண்மையில் அரச மட்டத்திலும் சமூக மட்டத்திலும் ஒரு பேசப்படும் விடயமாக உள்ளது.

அத்துடன் மாகாணத்தின் அளவில் பெரியதும் அதிக எண்ணிக்கையுள்ள பாடசாலைக் கொண்டவையுமான ரொரன்ரொ மற்றும் பீல் ஆகிய சபைகளின் தலைமைப் பொறுப்பை கொண்டுள்ள இயக்குனர்களாக கறுப்பினத்தைச் சேர்நத பெண் அதிகாரிகள் பணியாற்றுகின்றமை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

அதுவும்  கறுப்பினத்திற்கு எதிரான கருத்துக்களும்  ஆர்ப்பாட்டங்களும் கனடாவிலும் அமெரிக்காவிலும் பரவி இருக்கின்ற இந்த நேரத்தில் இந்த விடயமானJ  மதிக்கப்பட வேண்டியதொன்றாகவே பார்க்கப்படுகின்றது

மேலும்  ரொரன்ரோவின் கல்விச் சபையின்  இடைக்கால இயக்குனராக  திருமதி கார்லின் ஜெக்சன் பதவியேற்ற செய்தியை   கனடா உதயன் அண்மையில் பிரசுரித்திருந்தது. இதைப் போன்றே   பீல் பிராந்திய கல்விச் சபைக்கு திருமதி கொலீன் ருசெல்   மிக அண்மையில் பதவியேற்க உள்ளார் என்ற செய்தி எமக்கு கிட்டியுள்ளது. 

தலைமைப் பதவி வகிக்கும் மூன்றாவது கல்விச் சபையாக கனடாவின் தலைநகரமாகத் திகழும் ஒட்டாவா மாநகரிற்குள் அடங்கும் கால்ரன் கல்விச் சபையின் இயக்குனராக திருமதி வில்லியம் டெயிலர் என்னும் கறுப்பினப்  பெண்மணி பதவியேற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது  இவ்வாறிருக்க  ரொரன்ரோ கல்விச் சபையின் தலைமைப் பொறுப்பை அண்மையில் ஏற்றுக் கொண்ட இயக்குனர் ஜெக்சன்ஊடகவியலாளர்களோடு நடத்திய சந்திப்பின்போது

நாங்கள் மாற்றங்கள் நிகழுகின்ற ஒரு காலப்பகுதிக்கு வந்துள்ளோம் என்பதை எமது கல்விச் சபைகள்  எங்களுக்குக் காட்டுகின்றன. இந்த வகையான சாதனைகளை நாங்கள் நிச்சயம் கொண்டாட வேண்டும். கறுப்பினத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாம் மூவர் இந்த உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டமை  ஒரு நற்காரியம் ஆகும்  என்றார்

பீல் பிராந்திய கல்விச் சபையின் இயக்குனர் திருமதி ருசெல் கருத்துத் தெரிவிக்கையில்

  ஊடகவியலாளர்களான நீங்கள் எழுதிக் கொண்டிருக்கின்ற இன்றைய செய்திகள் மாற்றம் பெற்று  எமது கறுப்பினப்  பெண்களைப் போன்று  இந்நாட்டின் பழங்குடியினரின் வம்சாவழிகள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த வர்கள் இவ்வாறான பதவிகளை அலங்கரிக்கினறார்கள் என்ற செய்திகளையும் எதிர்காலத்தில் எழுத வேண்டிவரும்  என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

கறுப்பினப் பெண்மணிகளால் நிர்வகிக்கப்படும் ஒட்டாவா  ரொரன்ரோ மற்றும் பீல் ஆகிய மூன்று பிராந்திய கல்விச் சபைகளுக்கு கீழ்  உள்ள பாடசாலைகளில் சுமார்  நாலரை இலட்சத்திற்கு அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பல்லின சமூகங்கள் சேர்ந்து வாழும் இந்த கனடாவில் பல்லினங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கல்விச் சபைகளில் உள்ள உயர் பதவிகளை அலங்கரிப்பது முற்றிலும் பாராட்டுக்குரியது என்று ஒட்டாவாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இயங்கிவரும் பெற்றோர் சங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்  மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

இவ்வாறு கறுப்பினப் பெண்கள் கல்விச் சபைகளின்  தலைமைப் பதவிகளை அலங்கரிப்பது என்பது மிகுந்த பாராட்டுக்குரிய விடயமாகும் என்று குறிப்பிட்டுள்ள ரொரன்ரொ கல்விச்சபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக பணியாற்றும் தமிழரான   பார்த்தி கந்தவேள் பத்திரிகையாளர்களோடு கருத்துக் களைப் பரிமாறுகையில் இந்த பெண்மணிகளோடு பணியாற்றும் சந்தர்ப்பங்களைப் பெற்ற நான் அவர்களது ஆற்றலையும் மனித நேயத்தையும் நிர்வாகத் திறமையை யும் நன்கு அவதானித்தவன் என்றார்