சுற்றுச்சூழலில்மாசுகுறைந்துள்ளது - ஐ.நா.

2020-07-29 16:59:56

நியூயார்க் :

கொரோனா பரவலை தடுக்க விரைவாக செயல்பட்டது போல  நகர்புறங்களின் தட்பவெப்பம் சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கும் நாம் விரைந்து தீர்வு காண வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர்  அன்டோனியோ குட்டரெஸ்  தெரிவித்தார்.

 தற்போது  ஊரடங்கால்  சுற்றுச்சூழலில் மாசு குறைந்துள்ளது. இது தற்காலிகமானது.ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டால் மீண்டும் காற்று மாசு அதிகரிக்கும் என்றும் தெரிவித்த அவர்

அவ்வாறின்றி  தற்போதைய சூழலை சாதகமாக பயன்படுத்தி  காற்றின் மாசுபாட்டை குறைக்க தேவையான கொள்கைகளை  உலக நாடுகள் உருவாக்கி  விரைந்து செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் ஊரடங்கால் கிடைத்த பயனை நாம் இழக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  ஐ.நா. பொதுச் செயலர்  அன்டோனியோ குட்டரெஸ்  சர்வதேச நகரங்களில் கொரோனா குறித்த கொள்கை அறிவிக்கையை வெளியிட்டார். அப்பொழுதே அவர்; அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறக்கப்பட்டதால்  பல நாடுகளின் பொருளாதாரம் முடங்கியது. அதேசமயம் சுற்றுச்சூழல் மாசு கரியமில வாயு வெளியேற்றம் ஆகியவை வெகுவாக குறைந்துள்ளது.

 

டில்லியில்  காற்றில் உள்ள நைட்ரஜன் ஆக்சைடு அளவு  70 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

இது சீனாவின் நகர்புறங்களில் 40 சதவீதம்; பெல்ஜியம்  ஜெர்மனியில்  தலா 20 சதவீதம் ; அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் 19-40 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.

இதை தக்க வைக்கும் கொள்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்  என  ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

நகர்புறங்களைச் சேர்ந்தோர் தான்  கொரோனா வைரசால் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மாசுக் காற்றுப் பகுதிகளில் தான் கொரோனா இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

நெரிசல் மிகுந்த பகுதிகளில் அதிகமானோர் வசிப்பதும்  அவர்கள் மற்றவர்களுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதும் தான்  கொரோனா வேகமாக பரவ காரணம். இவ்வாறு அவர் கூறினார்.