பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் சிலை இந்தியா திரும்புகிறது

2020-07-30 23:49:11

லண்டன்:

கடந்த 1998 ல்  ராஜஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி செல்லப்பட்ட 9ம் நூற்றாண்டை சேர்ந்த பழமைவாய்ந்த சிவன் சிலையை மீண்டும்  இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

ராஜஸ்தானின் பரோலியில் கதேஸ்வர் கோயில் உள்ளது. இங்கு  கடந்த 1998 ம் ஆண்டு  9 ம் நூற்றாண்டை சேர்ந்த 4 அடி சிலை திருடப்பட்டது. பின்னர் இந்த சிலை பிரிட்டனில் உள்ள பழங்கால பொருட்களை சேகரிக்கும்  தனியார் நிறுவனத்தில் இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து  இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் முயற்சியால்  இந்த சிலை லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அது முதல்  லண்டனில் மத்தியில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கடந்த 2017 ல் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த சிலையை ஆய்வு செய்து ராஜஸ்தானின் கதேஸ்வர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட சிலை தான் என்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து விரைவில் அந்த சிலை  இந்தியா கொண்டு வரப்பட்டு காதேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட உள்ளது.

இந்தியாவிலிருந்து கடத்தி செல்லப்பட்ட விலைமதிப்பில்லாத கலைப்பொருட்கள் மற்றும் தொல்லியல் பொருட்களை  பிரிட்டன்  அமெரிக்கா  ஆஸ்திரேலியா  பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைந்து கண்டுபிடித்த பொருட்களில் இது தான் சமீபத்தியது ஆகும்.

உலக பாரம்பரிய சின்னமான  குஜராத்தின் ராணி கே வாவ் என்ற இடத்தில் திருடப்பட்ட பிரம்மா - பிரமணி சிலை  மீட்கப்பட்டு 2017 ல் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  இந்தியாவில் திருடப்பட்ட 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை லண்டன் போலீஸ் கமிஷனர் மீட்டார். பின்னர் 2019ம் ஆண்டு மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் 2019 ஆக. 15ல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்த நவனீத கிருஷ்ணர் சிலையும்  2ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால சிலை ஒன்றும் அமெரிக்க தூதரக அதிகாரி இந்தியாவிடம் ஒப்படைத்தார்.