சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - திரும்பப் பெறக் கோரி சீமான் போராட்டம்

2020-08-02 06:57:12

நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய வகையில் இந்திய மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 -ஐ திரும்பப்பெறக் கோரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் மின்னஞ்சல் பரப்புரையின் அடுத்த கட்டமாக இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் அன்னை பூமியை அன்புக்கொண்டு நேசிக்கும் அனைவரும் பங்கேற்குமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  நேற்று அழைப்பு விடுத்திருந்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச்செய்தியில்மேலும்குறிப்பிடப்பட்டுள்ளதாவது

தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கோரிக்கைகள் அடங்கிய பதாகையை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில்  #TNRejectsEIA2020 என்ற குறிச்சொல்லுடன் இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கோரிக்கை பதாகை ஏந்தி புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இது பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய வரவேற்பையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 குறித்தான விழிப்புணர்வையும் பரவலாக ஏற்படுத்தியுள்ளது.