விதைகள் மூலம் யுத்தம் . சீனா புதிய திட்டம் - அமெரிக்கா சந்தேகம்

2020-09-07 13:07:55

வாஷிங்டன்:

விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை அனுப்பி உயிரி தாக்குதல் நடத்த சீனா தயாராவதாக அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. கொரோனா வைரசை உலகுக்குப் பரப்பியது சீனாதான்  என  அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். மேலும்  அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கவே சீனாவின் கம்யூனிச அரசு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகிறது  எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமேசான் தளம் மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் சில விவசாயிகளுக்கு இலவசமாக கடுகு  ரோஸ்மேரி  லாவண்டர்  செம்பருத்தி  ரோஜா  புதினா உள்ளிட்ட 14 வகையான விதைகள் கொண்ட பாக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.

தாங்கள் யாரும் ஆர்டர் செய்யாமலேயே இந்த விதைகள் வந்துள்ளன என விவசாயிகள் அமெரிக்க அரசிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட விற்பனையாளரை தங்கள் தளத்தில் இருந்து நீக்கியது அமேசான். இனி இதுபோன்ற தவறு நடக்காது எனவும் உறுதியளித்தது.

அமெரிக்க விவசாயத்தை முடக்கவும் உயிரியல் போர் தொடுக்கவும் சீனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இந்த விதைகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதுபோல இலவசமாக கிடைக்கும் விதைகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க விவசாயத் துறை எச்சரித்துள்ளது.