கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்

2020-10-15 20:02:38

தமிழகத்தில் தற்போது 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும்  ஒரு எம்.பி. தொகுதியும் காலியாக உள்ளன.

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.சாமி (திருவொற்றியூர்) இ காத்தவராயன் (குடியாத்தம்)  ஜெ. அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) ஆகியோரின் மறைவினால் மேற்குறிப்பிட்ட 3 தொகுதிகளும்  காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவினால் கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதியும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

(வசந்தகுமாரும்  ஜெ. அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த மக்கள் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது).

பொதுவாக  எம்பியோ  எம்எல்ஏயோ மறைந்து விட்டால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தி  புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுக்கவேண்டும் என்பது விதி.

ஆனால்  தமிழக சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடக்கவேண்டிய நிலையில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

ஆனால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

இதுபற்றி  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ கூறியதாவது:-

 கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மறைவை தொடர்ந்து  அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

•             சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னோட்டம்

கன்னியாகுமரி எம்பி தொகுதியைப் பொருத்த அளவில் தேசியக்கட்சிகளான காங்கிரசும்  பாரதீய ஜனதாவும் வலுவாக உள்ளன.

திமுக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் குதிக்க  வசந்தகுமாரின் மகன் விஜய் காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால் காங்கிரசில் ஒரு சாரார் பிரியங்காகாந்தியை இங்கு நிறுத்தி வெற்றி பெறச்செய்து நாடாளுமன்றம் அனுப்பவேண்டும் என்று கருதுகிறார்கள்.

பாரதீய ஜனதா சார்பில் கடந்தமுறை இங்கு போட்டியிட்டுத் தோற்ற பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று கருதுகிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியை வைத்து  அடுத்து நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ள  திமுக-காங்கிரஸ் அணியும்  அதிமுக-பாரதீய ஜனதா அணியும் வியூகம் வகுத்து வருகின்றன.

---மணிராஜ்

திருநெல்வேலி.