சங்கத்தினை சிதைப்பதற்கு பலர் திட்டம்!! - முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்

2020-10-17 00:09:13

2650பேரைகொண்ட மிகப்பெரிய கட்டமைப்பான எமது சங்கத்தினை சீர்குலைப்பதற்கு முகம் தெரியாத விரோதிகள் சதிகளை முன்னெடுப்பதாக வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில்  வாடகைகார் சேவைக்கு  முச்சக்கரவண்டி தரிப்பிடங்களில் அனுமதி வழங்கியமையால் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலமை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்....

வாடகைக்கார் சேவைக்கு நாம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனினும் எமது தரிப்பிடங்களில் கார்களை நிறுத்தி சேவையில் ஈடுபடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது. இந்த செயற்பாடானது அங்கத்தவர்களிடையில் பாரிய சமூக முரன்பாட்டை ஏற்படுத்தக்கூடிய விடயமாகவே உள்ளது.முச்சக்கரவண்டித் தரிப்பிடங்கள் இல்லாத இடங்களில் அவர்களிற்கு இடத்தினை ஒதுக்கி கொடுப்பதற்கு நாங்கள் பூரண சம்மதம் தெரிவிக்கின்றோம்.

எமது முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தில் 2650 அங்கத்தவர்கள் இருக்கின்றனர்.அத்துடன் ஒழுக்கமான முறையில் மக்களுக்கு சிறப்பான சேவையை நாம் வழங்கி வருகின்றோம்.உழைப்பிற்கும் அப்பால் தமிழ்மக்களினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு உரிமைசார்  போராட்டங்களிற்கும்  கர்த்தால்களின் போதும் எமது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வழங்குவதற்கு நாம் எப்போதும் தவறியதில்லை.

நிலமை இப்படியிருக்க மிகப்பெரிய கட்டமைப்பான எமது சங்கத்தினை உடைப்பதற்காக முகம் தெரியாத விரோதிகளால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சதிச்செயற்பாடாகவே நாம்  இதனை பார்க்கிறோம்.

அத்துடன் எமது அங்கத்தவர்களிற்கான வருமானம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் வசதி படைத்தவர்களால் கொள்வனவுசெய்யப்படும் இப்படியான கார்களை அறிமுகப்படுத்தி முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுடன் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு சில மாபியாக்கள் விரும்புவது போலவே தெரிகிறது.

தேவை ஏற்ப்படின் 25 வருடமாக சேவையில் ஈடுபடும் எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் எதிர்காலத்தில் கார்களை கொள்வனவு செய்து சேவை செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றனர்.

நகரம் வளர்ச்சியடைந்துள்ளது.எனவே மக்களிற்கு சௌகரியமான பயணத்தை வழங்கும் முகமாக கார்களையும் சேவையில் ஈடுபடுத்துங்கள்என்று நகரசபை நிர்வாகம் எமது சங்கத்துடன் கலந்துரையாடியிருந்தால் நாம் அதனை நிறைவேற்றி இருப்போம்.அதனைவிடுத்து 25 வருடமாக சேவை செய்யும் எமது அங்கத்தவர்களை அழைத்து  நகரசபை பேச்சுவார்த்தையை மேற்கொள்ளாமல். இப்படியான வேலைத்திட்டத்தினை மூடி மறைத்தமை எதற்காக என்பது எமக்கு விளங்கவில்லை..

நகரில் என்ன தேவை என்றாலும் எம்மையே அழைத்து பேசுகின்றனர். இப்படியான நிலமைகளின் போது எம்மை புறம்தள்ளி முடிவுகளை எடுக்கின்றனர் என்று தெரிவித்தார்