முகில்வண்ணன் என்றொரு முதிசொம்.

2020-10-17 18:41:39

நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் வித்தகர் என்றெல்லாம் எம்மத்தியில் பேசப்படும் முகில்வண்ணன் என்ற புனைபெயருடன் கடந்த 60வருடகாலமாக  ஈழத்து இலக்கியவானில் உலாவந்த திரு.வேலுப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் இன்றில்லை.

இக்குவலயத்தில் 78வருடங்கள் வாழ்வாங்குவாழ்ந்த முகில்வண்ணன் அவர்களோடு இறுதி 25வருடகாலம் நெருங்கிப் பழகக்கூடியவாய்ப்புக்கிடைத்தமை ஒரு பேறாகும். அத்தகைய மனிதநேயம்கொண்ட மாமனிதர் அவர். எதையும் சிரித்தமுகத்துடன் நிதானமாக அணுகும் சுபாவம் அவருக்கு. தற்பெருமையில்லாத இடாம்பீகமில்லாத ஆரவாரமில்லாத ஓர் இலக்கியவாதி.

முகில்வண்ணன். தமிழ்வாசகரிடையே இடையீடின்றிநித்தமும்வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரு நாமமாகும். ஈழத்துவட்டாரச்சொல் தேடுவோருக்கும் மண்ணோடு குழைந்த சொற்பிரயோகங்களைத் தேடுவோருக்கும் ஊற்றுக்கண்ணான இலக்கியம் படைத்த பெயராகும்.

பஞ்சபாண்டவர் புகழ்பாடும் வரலாற்றுநாயகி குடிகொண்டிருக்கின்ற பாண்டிருப்பிலே பிறந்து முகில்வண்ணன் நாடறிந்த எழுத்தாளராகத் தடம் பதித்தவர். 1960களில் எழுத்துலகில் காலடி எடுத்துவைத்தவர். மென்குணம்படைத்த சிறந்தபேச்சாளர். அனைத்திற்கும் அப்பால் பிரம்மகுமரிரிகள் இராஜயோகநிலையத்தின் ஈடுபாட்டால்ஒருசீரியஆன்மீககொள்கைவாதியாகவும் திகழ்ந்தார்.

கல்முனைபாண்டிருப்பைச்சேர்ந்தமுகில்வண்ணன் சிறுகதை கவிதை நவீனம் கட்டுரை நாவல் என இலக்கியப்பரப்பில்30நூல்களைஎழுதிவெளியிட்டவராவார். எழுத்துலகில் 50ஆண்டுகள் எழுதி பொன்விழாக்கண்டஎழுத்தாளன்எனப்பெயரெடுத்தவர்.

ஆனந்தக்கண்ணீர்;  அவள் ஒருதமிழ்ப்பெண் இனியும் நான் இராமன்தான்  செல்லக்கிளி    முருகனருள ;   பாண்டிருப்புஸ்ரீ திரௌபதை அம்மனாலயம் பாவைநோன்புபளிங்குமாளிகை பொங்கல்கவிதைகள் சிங்கராஜா   ஒரு தேடல்  கட்டுரைக்களஞ்சியம; நீறுபூத்தநெருப்பு எழுத்துலகில் 50ஆண்டுகள்  போன்ற காலத்தைவென்ற பல இலக்கியப்படைப்புகளை வெளியிட்டவராவார்.

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை

மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை..

கவிஞர் வைரமுத்துவின் கவிவரிகளின்படி ஞாபகம் மறதி இரண்டும் மாமருந்துதான். எனினும் அவரது நூல்வெளியீட்டுவிழா தொடர்பான ஞாபகப்பதிவொன்றை இவ்வண் சுட்டுகிறேன்.

ஒரு தடவை கல்முனைநெற் இணையக்குழுமம் முகில்வண்ணன் அவர்களது மூன்று நூல்களை கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் வெளியிட்டுவைத்தது இன்றும் பசுமரத்தாணிபோல் நினைவிலுள்ளது.

கல்முனைநெற் இணையத்தாபகர்.புவிநேசராசா கேதீஸ் அத்தருணம் தொழில்நிமித்தம் கட்டாரில் இருந்தார்.அவர்என்னிடம்வேண்டிக்கொண்டதற்கிணங்க அவ்வெளியீட்டுவிழாவை நெறிப்படுத்தி தொகுத்துவழங்கும் பொறுப்பைஏற்றுச்செய்தேன். அதுமட்டுமல்ல அவரது  நீறுபூத்த நெருப்பு  என்ற நவீனத்திற்கான அணிந்துரையை எழுதிய எனக்கு  நயவுரையையும் செய்யும் பாக்கியமும் அதே மேடையில் கிடைத்தது.

அமர்க்களமாகநடைபெற்றஅவ்வெளியீட்டுவிழாவில் மிகவும் அடக்கமாக புன்முறுவலுடன் ஆரவாரமின்றி தனது மனைவி உள்ளிட்ட குடும்ப உறவுகளுடன் வீற்றிருந்தார்.

நிகழ்வுநிறைவுற்றதும்நான்நூல்களைப்பெறாமலே வந்துவிட்டேன். அன்றிரவே அவர் எனது வீட்டுக்குவந்து அந்த 3நூல்களையும் கையளித்துச்சென்ற நன்றியுணர்வையும் பிறரை மதிக்கும் பண்பையும் உணர்ந்தேன்.

அன்று இப்பிரதேசத்தில் கல்முனை  எலக்ரோன் என பிரபலமான பெயரோடு இருந்தவர் தொழிலில்பொறியியலாளாராவார்.பஞ்சாயக்குழு உபதலைவராகவிருந்தவர்.1966களிலிருந்து எழுதத்தொடங்கியர். அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்சங்கத்தின்செயலாளராகயானிருந்தகாலைமுகில்வண்ணன்தனாதிகாரியாகவிருந்தவர்.

இலக்கியப்பரப்பில் கலாபூசணம் வித்தகர் எனப்பலவிருதுகளுக்குசொந்தக்காரன்.பாண்டிருப்பு துரௌபதைஅம்மனாலய தலைவராக சிலகாலம் இறைபணியாற்றியவர். இலங்கை பிரம்மகுமாரிகள் அமைப்பின் முக்கிய பிரமுகராகஇருந்த ஓர் ஆன்மீகவாதி.திருவாசகம் கந்தசஷ்டி போன்ற தமிழ்நூல்களை மொழிபெயர்த்து சிங்களத்தில் எழுதியுள்ளார். இதற்கு இந்துகலாசாரதிணைக்களம் யாழ்ப்பாணத்தில் 2016இல் நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டில்வைத்து பாராட்டிக்கௌரவிக்கப்பட்டவராவார்.

தான் சார்ந்த மண்ணின்வாசனையையும் அங்குவாழ்கின்ற மனிதர்களையும் அவர்களது பல்வேறு செயல்களையும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இலாவகமாகக்கையாண்டு இலக்கியஉலகிற்குபலகாத்திரமானபடைப்புகளைப்படைத்திருக்கிறார் .

தான் அறிந்த நல்லவற்றை பிறருக்கும் தெரியப்படுத்தவேண்டும். இல்லையேல் முன் ஏழு பிறவிக்கும் பின் ஏழு பிறவிக்கும் பாவங்கள் சூழும்  என மகாபாரதம் கூறிநிற்கின்றது.

அந்தவகையில் முகில்வண்ணன் ஒருபல்பரிமாண ஆளுமைபொருந்திய மும்மொழிப்புலமை வாய்ந்த ஓர் இலக்கியவாதி. எழுத்துலகில் 60ஆண்டுகள் வலம்வருவது  சாமானியமானதொன்றல்ல. அதுவும் இலக்கியத்தில் ஒருதுறையில் மட்டுமல்ல கவிதை கட்டுரை கதை சிறுகதை நாவல் என்று பல முகங்களில் தன்னைப்பதித்தவர்.

அவரது நாவல் முகம் அவரது பல்வேறுபட்ட இலக்கிய திறமை முகங்களில் ஒன்று மட்டுமே.பொதுமைப்படுத்தப்பட்ட செம்மை சிந்தனை சார்ந்த சேவை மனப்பாங்குடைய சேர்நேர்மை நீதிச் செயற்பாட்டாளர் உலகில் வலுகுறைவு.இக்குறை பட்டியலுள் அவர் முதன்மை பெறுகிறார்.

இலக்கிய லஞ்சம் கொடுத்து படைப்புக்களை வெளியிட விரும்பாத அவர் தனது பல நூல்களை வெளியீட்டுவிழா இல்லாமலேபரப்பியிருக்கிறார்.

முழுக்குடும்பத்தின் ஆணிவேராகத்திகழ்ந்த அவரை இறைவன் 76வயதில் தன்னோடு இணைத்துக்கொண்டதில் அனைவருக்கும் வேதனைதான். இருந்திற்றபோதிலும் இயற்கையின் நியதி அதுதான்.

வாழ்வின் நியதி!

வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இப்பூமியில் எமக்கு இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் அதில் ஜனனம் என்பது வரவாகும் மரணம்என்பது செலவாகும். போனால் போகட்டும்போடா!  என்று கவிஞர் கண்ணதாசன் பாடியது பொய்யல்லவே.

.பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்

நித்திரை போவது நியதி என்றாலும்

யாத்திரை என்பது தொடர்கதையாகும்...

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை...

என்று  தாங்க முடியாத இழப்பான மரணத்தை எதிர்கொள்ளும் கொடிய தருணத்தில் மனதில் நிம்மதி சூழ்ந்திட பிரபலகவிஞர் வைரமுத்து எழுதிய கவிவரிகளில் சில.

ஜனனம் தற்செயலானது மரணம் நிச்சயமானது. அவர் இந்த அநித்தியமான உலகைவிட்டு நித்தியமான உலகிற்கு சென்றுள்ளார்.

பிறப்பு ஒரு சம்பவமாக இருந்திற்றபோதிலும் மரணம் ஒரு வரலாறாக இருக்கவேண்டும் என்பார்கள்.அதனைஅவர்சாதித்துக்காட்டியுள்ளார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் பெறப்படும்  என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். நல்ல பிள்ளைகளை இப்பூவுலகிற்களித்து பேரப்பிள்ளையையும்கண்டு இப்பூவுலகைவிட்டுபிரியாவிடைபெற்றுச்சென்றுள்ளார். ஆம். உண்மையில் அவர் ஒரு முதுசொம்.அவர்தம் ஆத்மா சாந்தியடைவதாக.

விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜாஉதவிக்கல்விப்பணிப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர். காரைதீவு