எந்த சந்தர்ப்பத்திலும் சோரம்போகக் கூடாது- பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா

2020-10-17 19:03:43

எந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது என மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி முதல் கடமையாற்றி வந்த கலாமதி பத்மராஜாவுக்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால்  (16) (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்  மாவட்டச் செயலக உயர் அதிகாரிகள் உட்பட சகல உத்தியோகத்தர்களும் பிரசன்னமாயிருந்த நிலையில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  பொது மக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து ஒன்பது மாதங்களில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அவரது சேவைக் காலத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இதனால் நோய்தொற்று ஏற்படாத மாவட்டமாக இன்றும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மேலும்  இக்காலப் பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த அனைத்துத் தரப்பு மக்களினதும் நலனில் அக்கறையோடு செயற்பட்டு அவர்களுக்கான நிவாரணங்களை அரச மற்றும் தனியார் தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொடுத்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமலும் தற்காப்பு உணவுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் துரிதமாக செயற்பட்டு வெற்றிகண்டுள்ளார்.

குறித்த மாவட்டத்தில் காணப்படும் விவசாய உற்பத்திகள்  கால்நடைகள்  சிறு கைத்தொழில் அபிவிருத்தி  கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி  நீர்ப்பாசனம் போன்ற துறைகளை மேம்படுத்துவதிலும் கல்வி  சுகாதார வசதிகள் போன்றவற்றில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை செலுத்தியுள்ளார்.

இதனூடாக  மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடிவதுடன் மாவட்டத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தினை உயர்த்தமுடியும் என்ற அடிப்படையில் செயற்பட்டுவந்தார்.

இதுதவிர  மக்களின் வறுமையை மேலும் வறுமைப்படுத்தும் அதிக வட்டிவீதத்திலான நுண்கடன் திட்டங்களை இடைநிறுத்தி மாவட்டத்தின் வளங்கள் சுரண்டப்படுவதை கட்டுப்படுத்துவதிலும் அக்கறை செலுத்தி வளமிக்க மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டதினை உயர்த்திட செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது