தமிழ் கட்சிகளின் கூட்டம்- சுமந்திரன் வருகையால் அனந்தி வெளியேறினார்

2020-10-17 19:31:17

தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமானது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதற் தடவையாக ஒற்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார். அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தைவிட்டு வெளியேறி வெளிநடப்பு செய்தார்.

இந்தக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வருகை தர உள்ளார் என்ற தகவலை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை.

கடந்த மாதம் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளின் அழைப்பின் பேரில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன்  எம்.ஏ சுமந்திரன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன்  ஈ.சரவணபவன்  சிறிகாந்தா மற்றும் அருந்தவபாலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.