வவுனியாவில் வெளிமாவட்ட வியாபாரிகளிற்கு அனுமதி வழங்கவேண்டாம்!! தவிசாளர்

2020-10-28 00:01:59

வவுனியா

கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடைந்துவரும் நிலையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வவுனியாவில் வியாபாரசெயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசு தடைவிதிக்கவேண்டும் என்று வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்...

கொரோனா வைரஸ் தாக்கம் நாடளாவிய ரீதியில் அதிகரித்து செல்கின்றது.வவுனியா மாவட்டத்திலும் வீதி திருத்தப்பணிகளில் ஈடுபட்டுவரும் சில நபர்களிற்கு வைரஸ்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்து இங்கு வியாபாரச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசு தடைவிதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

வவுனியாவை பொறுத்தவரை வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வருகைதந்து  வீதிக்கரைகளிலும் பொது இடங்களிலும் பல்வேறு வியாபார செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.எமது பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்  இந்த நடவடிக்கையில் பலர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் வைரஸ்தாக்கம் இலகுவில் பரவலடைவதற்கான  சந்தர்பம் ஏற்படுகின்றது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு வைரஸ்பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் முன் எச்சரிக்கையான முறையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வியாபாரம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் உடனடியாக தடைவிதிக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.